தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 23 செப்டம்பர், 2019

ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக BSNL ஊழியர் சங்கம்

அன்பார்ந்த தோழர்களே,

நிரந்தர ஊழியர்களுக்கான ஊதியத்தையும் உரிய தேதியில் நிர்வாகமும் அரசாங்கமும் வழங்குவதில்லை. நமக்கு வழங்கும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைகளும் உரிய மட்டங்களுக்கு உரிய தேதியில் செலுத்தாமல், மாதக்கணக்கில் தாமதப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் நம்மை விட மிகக் குறைந்த கூலிக்கு நம்முடன் வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாத காலத்திற்கு மேலாக ஊதியம் தரப்படவில்லை. ஒட்டு மொத்த குடும்பங்களும் பட்டினி கிடக்கும் அபாயச் சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. அவர்களின் பட்டினிகளும், தற்கொலைகளும் கூட நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியவில்லை. தொழிலாளர் நலத்துறையும் பாராமுகமாகவே இருக்கின்றது.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல, தற்போது எட்டு மாத கால ஊதியம் தராமல் இருக்கும் சூழ்நிலையில் 50% ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய நிர்வாகம் முயற்சி செய்கின்றது. தொடர்ச்சியாக நிரந்தர ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று வரும் சூழ்நிலையில், தற்போதுள்ள ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கையே குறைவு என்ற நிலை உள்ள போது, நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி கவலைப்படாமல் சிக்கனத்திற்கு ஒரே வழி ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கையை குறைப்பது என்று தான் தோன்றித்தனமாக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதிலும் 50 சதவிகித ஊழியர்களை குறைக்க வேண்டுமாம். சம்பள நிலுவையில் உள்ள போது பணி நீக்கம் செய்யக்கூடாது என்கிற தொழிலாளர் நலச்சட்டத்தையும் பின்பற்ற மறுக்கிறது.

இது தொடர்பாக மாநில நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பயன் ஏதும் இல்லை. அவர்களும் தங்களின் கையறு நிலையை தெரிவிக்கிறார்களே ஒழிய வேறு ஏதும் இல்லை.

பட்டினிக்கும் பதிலில்லை. பணி நீக்கமும் நடைபெறுகிறது என்கிற போது வேறு வழியின்றி, தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (TNTCWU) செப்டம்பர் 26 முதல் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுத்திட நமது கிளை மற்றும் மாவட்ட சங்கங்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கிளை மற்றும் மாவட்ட மட்டங்களில் TNTCWU சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் BSNL ஊழியர் சங்கங்கள் முழுமையாக செய்திட வேண்டும்.

அது மட்டுமல்லாமல் செப்டம்பர் 26 முதல் 28 வரை அனைத்து கிளைகளிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும். இதில் நிரந்தர ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் திரட்டி, இந்த ஆர்ப்பட்டத்தையும், ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்தத்தையும் வெற்றிகரமாக்கிட வேண்டும் என கோவை மாவட்ட சங்கம் அனைத்து கிளை சங்கங்களையும்  கேட்டுக் கொள்கிறது.

போராடும் தொழிலாளிக்கு நமது முழுமையான ஆதரவை தருவோம்! அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதியத்தை பெற்றுத்தருவோம்!! அடாவடித்தனமாக ஆட்குறைப்பு செய்யும் அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் சூழ்ச்சியினை முறியடிப்போம்!!!
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக