தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

சிந்திப்பீர் வாக்களிப்பீர்

பிஎஸ்என்எல் என்ற நிறுவனமெல்லாம், தாராளமய கொள்கைக்கு பிறகு உருவாக்கப்பட்டவை.  அதற்கு முன், பி அன்ட் ட்டி டிப்பார்ட்மென்ட் என்பார்கள்.  போஸ்டல் அன்ட் டெலிகிராப்.  தபால் மற்றும் தொலைத் தொடர்பு துறை இரண்டும் ஒரே துறைகளாக இருந்தன.

அந்த துறைக்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம்தான், அரசு தொலைத் தொடர்புத் துறை ஊழியர் கூட்டுறவு சங்கம்.   இந்த சங்கம் உருவான ஆண்டு 1912.  அத்தனை பழமையான சங்கம் இது.  இந்த சங்கம் 2003ம் ஆண்டு வரை, வெறும் கூட்டுறவு சங்கமாக இருந்தது.

2003ம் ஆண்டில் அந்த சங்கத்தில் இருந்த சிறப்பு அதிகாரி, சங்கத்தின் பெயரில் நிலம் வாங்கலாம் என்று முடிவெடுக்கிறார்.  அதன்படி, திருவள்ளுர் மாவட்டம், வெள்ளானூர் கிராமத்தில், ஒரு ஏக்கர் 16 லட்சம் வீதம் 15.97 கோடிக்கு 95.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.  இந்த நிலத்தை வாங்குவதற்காக ஐசிஐசிஐ வங்கியில் 16 கோடி கடன் பெறப்பட்டது.

2013ம் ஆண்டு, இந்த நிலத்தை சங்க உறுப்பினர்களுக்கு குலுக்கல் மூலம் ஒதுக்குவதென்றும், குலுக்கலில் நிலம் கிடைக்காதவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் பணம் வழங்குவதென்றும் முடிவெடுக்கப்படுகிறது.

இதன் பிறகு, இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினால் என்ன என்று ஒரு ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.  20.09.2013 அன்னு சென்னை க்ரீன் பார்க் ஹோட்டலில், இந்த சொசைட்டியின் இயக்குநர்கள் கூட்டம் நடைபெறுகிறது.



அந்த கூட்டத்தில் மொத்தம் உள்ள 10 இயக்குநர்களில் 7 பேர் அடுக்குமாடி வீடுகள் என்றும், 3 பேர் நிலம் என்றும் வாக்களிக்க, பெரும்பான்மை அடிப்படையில், அடுக்குமாடி வீடுகள் கட்டுவதென்று முடிவெடுக்கப்படுகிறது.

23 நவம்பர் 2013 அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்காக டெண்டர் விடப்படுகிறது.   அந்த டெண்டரில் எத்தனை பேர் பங்கேற்றார்கள், யார் யார் பங்கேற்றார்கள் என்ற விபரங்கள் எதுவும், சொசைட்டி உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

OTCO இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துக்கு இந்த கட்டிடங்களை கட்டு ஒப்பந்தப் புள்ளி வழங்கப்படுகிறது.

OTCO International நிறுவனம் ஒரு மென்பொருள் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கும் கட்டுமானத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நிறுவனம் அதன் இணையதளத்தில் அதைப் பற்றி கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது.

OTCO International Ltd. is a leading IT Solutions and Service-Providing Company. This new age of otco International is also now focusing as Financial Consultant, Management Consultant and business of enterprise solution for Micro Finance industry and Financial industry. It was Founded in the year 1981 .We are a technically advanced organization and ready to serve the toughest of the technical IT challenges as well as financial advisory challenges.



இந்த நிறுவனத்துக்கும் கட்டுமானத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.   இப்படி முன் அனுபவம் இல்லாத ஒரு நிறுவனத்துக்கு எப்படி பிஎஸ்என்எல் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான சொசைட்டி வாங்கிய நிலடத்தில் கட்டிடங்கள் கட்ட டெண்டர் வழங்கப்பட்டது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

சரி அதைக் கூட ஒரு ஒதுக்கி விடுவோம்.  இந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டால், இந்த நிறுவனம் என்ன செய்ய வேண்டும் ? நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  சரியா ?

OTCO இன்டர்நேஷனல் நிறுவனம், ஒரு மாடல் வீட்டை கட்டுகிறது.  இது எதற்காக என்றால், சொசைட்டி உறுப்பினர்களிடம், இதே போல ஒரு வீட்டைத்தான் உங்களுக்கு கட்டித் தரப் போகிறோம் என்று சொல்வதற்காக.  இது நடப்பது 2013 இறுதியில்.

அந்த மாடல் கட்டிடத்துக்கு நேரில் சென்றேன்.  ஆவடி மற்றும் திருமுல்லைவாயில் இடையே, அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் திசையில் வலது புறம் திரும்பி பல வளைவு நெளிவுகளை கடந்து செயின்ட் மைக்கேல் பாலிடெக்னிக் அருகே இந்த மாடல் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பெரிய தோட்டம் அமைத்துள்ளார்கள்.  கட்டிடத்தை பராமரிக்க ஒதிஷாவிலிருந்து இருவர் அங்கே உள்ள வாட்ச்மேன் அறையில் தங்கியுள்ளனர்.  உள்ளுர் காரர் ஒருவர் அங்கே லுங்கி கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்.

இவ்வளவு தள்ளி காலியான ஒரு கட்டிடம் இருக்கிறதே.  தவறான காரியங்கள் ஏதும் இங்கே நடைபெறுமோ என்ற சந்தேகத்தில், அடுக்கு மாடி வீட்டின் சாவி எங்கே இருக்கிறது. வேறு யாராவது இங்க வருகிறார்களா என்று அந்த ஒதிஷாகாரர்களிடம்  கேட்டேன்.   இல்லை சாவி கூட்டுறவு சங்க நிர்வாகிகளிடம் இருக்கிறது.  கோயி நகி இதர் ஆத்தா ஹை சாப் என்றார் அந்த ஒதிஷா காரர்.  உள்ளுர்  ஆசாமி என்னை அவர் மொபைலில் போட்டோ எடுத்தார். (போட்டோவில் அழகாக விழுந்திருக்கிறேனா என்பது தெரியவில்லை) வீட்டை போதுமான அளவு போட்டோ எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

 

ஆனால் அதன் பிறகு எந்த வேலையும் நடைபெறவில்லை. OTCO இன்டர்நேஷனல் நிறுவனம், வீடு கட்டித் தருவதற்காக வந்த நிறுவனம் இல்லையா ?

ஆனால், இந்த பிஎஸ்என்எல் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கத்தை நிர்வகிக்கும் இயக்குநர் குழுவின் தலைவர் வீரராகவன், துணைத் தலைவர் ரகுநாதன், பொருளாளர் திரிசங்கு, மற்றும் இயக்குநர்கள் அனைவரும் சேர்ந்து, இந்த 95 ஏக்கர் நிலத்துக்கான பவர் பத்திரத்தை OTCO இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு 16 மற்றும் 20 டிசம்பர் 2017 அன்று எழுதித் தருகிறார்கள்.  ஒரு இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வந்த நிறுவனத்திடம் எதற்காக நிலத்துக்கான பவர் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்பது புரியவில்லை.



சரி. அத்தோடு விட்டார்களா என்றால் இல்லை.   20 டிசம்பர் 2017 அன்று, இந்த நிலங்கள் அனைத்தும் OTCO இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பத்திர எண் 12871 மற்றும் 12872/2017 என்ற பத்திர எண்ணில், 4.51 கோடிக்கு ஒரு பகுதி நிலமும், 10.93 கோடிக்கு மற்றொரு பகுதி நிலமும், என, சொசைட்டிக்கு சொந்தமான மொத்த நிலங்களும் OTCO இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பத்திரப் பதிவு நடக்கும் நாள் 20.12.2017.  12871 என்ற பத்திரத்தை, போதுமான முத்திரை கட்டணம் (Stamp Duty) கட்டவில்லை என்பதற்காக, முத்திரை சட்டப் பிரிவு 47 (A) (1)ன் கீழ் சார் பதிவாளர் நிறுத்தி வைக்கிறார்.



வழக்கமாக இது போல முத்திரைக் கட்டணக் குறைவு காரணமாக பத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டால், அது வருவாய்த் துறையில் இதற்கென்றே உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) அவர்ளிடம் அனுப்பப்படும்.  அவர் கட்டிடத்தை ஆய்வு செய்து, அனுமதி அளித்த பின்னரே, பத்திரம் சம்பந்தப்பட்டவரிடம் வழங்கப்படும்.

ஆனால் 20.12.2017 அன்றே OTCO இன்டர்நேஷனல் நிறுவனம், Jesuit Ministries என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறது.  எந்த நிலத்தை தெரியுமா.

பத்திர எண் 12871/2017ல், 10.93 கோடிக்கு கூட்டுறவு சொசைட்டியால் OTCO இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட அந்த நிலத்தை 25.78 கோடிக்கு விற்பனை செய்கிறது OTCO இன்டர்நேஷனல்.



1 மணி நேரத்தில் OTCO இன்டர்நேஷனல் நிறுவனம் சம்பாதித்த லாபம் 15 கோடிகள். OTCO இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 2017-2018க்கான ஆண்டறிக்கையில், 2016-17ல், 9 லட்சமாக இருந்த அதன் லாபம்      2017-18ல், 1.41 கோடியாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.  லாபம் திடீரென்று உச்சத்துக்கு போனதை ஒரு புறம் வைத்துக் கொள்ளலாம்.   ஒரே நாளில் நில விற்பனை செய்ததில் மட்டும் அந்த நிறுவனம் சம்பாதித்த தொகை 15 கோடிகள்.   இந்த நிலத்தை தொலைத் தொடர்பு ஊழியர் சங்கத்திடம் இருந்து வாங்கியது குறித்தோ, அதே Jesuit Industries நிறுவனத்துக்கு விற்றது குறித்தோ, OTCO இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் ஒரு வரி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிறுவனம், தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம். 12 அக்டோபர் அன்று உள்ளபடி அதன் ஒரு பங்கு ரூபாய் 12.05க்கு பரிவர்த்தனை செய்ய்ப்பட்டுள்ளது.    அதன் காரணமாக SEBI விதிகளின்படி, இந்த நில பரிவர்த்தனையை அந்த நிறுவனம், SEBIக்கு தெரிவித்திருக்க வேண்டும். 31.03.2018 அன்று வரையுள்ள அதன் ஆண்டறிக்கையில்  இந்த பரிவர்த்தனை இடம் பெற்றிருக்க வேண்டும்.   இந்த ஒரே காரணத்துக்காக செபி இந்த நிறுவனத்தை பங்குச் சந்தையிலிருந்து நீக்கலாம்.

இந்த Jesuit Ministries யாரென்று பார்த்தால் வெறி பிடித்த ஒரு கிறிஸ்துவ அமைப்பு.   ஏஞ்சல் டிவி நடத்தும் க்ரூப்தான் இந்த Jesuit Ministries. உலகம் முழுக்க கிளை அமைத்திருக்கும் இந்த அமைப்பு, “ஏ பாவிகளே. உலகம் அழியப் போகிறது.  தீர்ப்பு நாள் விரைவில் வருகிறது. அதற்குள் கர்த்தரிடம் சரணடையும்” என்று கத்திக் கொண்டிருக்கும் கூட்டம். http://www.jesusministries.org/

அந்த பகுதியில் விசாரித்ததில் ஒரு ஏக்கர் நிலம் ஒரு கோடிக்கு போகிறது என்றார்கள்.

95 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய தொலைத் தொடர்பு ஊழியர்களின் நிலத்தை யார் யாரெல்லாம் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா ?

இது தொடர்பாக பிஎஸ்என்எல்லில் பணியாற்றும் சில ஊழியர்களிடம் பேசியதில், சார் எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. எங்கள் கண் முன்னால் எங்கள் உழைப்பில் வாங்கப்பட்ட நிலம் பறிபோகிறது.  நாங்கள் செய்வதறியாது நிற்கிறோம் என்றார்கள்.

இந்த கட்டுரை தொடர்பாக, தொலைத்தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் கருத்தை அறிய, அதன் தலைவர் வீரராகவனை  தொடர்பு கொண்டால் அவர் தொடர்ந்து இணைப்பை துண்டித்தார்.


வீரராகவன்

துணைத் தலைவர் ரகுநாதனை தொடர்பு கொண்டபோது, நான் கோவிலில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன் என்றார்.  ஒரு நேரத்தை சொல்லுங்கள் நான் அழைக்கிறேன் என்றால், உடனே இணைப்பை துண்டித்தார்.  பொருளாளர் திரிசங்குவை தொடர்பு கொண்டபோது, எதுவாக இருந்தாலும் தலைவரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று துண்டித்து விட்டார்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உதயமாகி செயல்படும் ஒரு சொசைட்டி வாங்கிய நிலத்தை ஒரு சில பேராசைக்கார்கள் அகபரிப்பது எத்தனை பெரிய மோசடி ?  இந்த சொசைட்டியின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் உயர் உயர் அதிகாரிகள் அல்ல.  அவர்களும் சக தொழிலாளர்களே.  அவர்களே சக தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தால் ?

மனிதனின் பேராசைக்கு அளவே இல்லையா என்று மலைப்பே ஏற்படுகிறது.

வெறுமனே கட்டுரை எழுதுவதோடு நில்லாமல், இது தொடர்பாக உரிய அமைப்பிடம் புகார் செய்து, இந்நிலம் பிஎஸ்என்எல் தொழிலாளர்களுக்கு சென்று சேர்வதற்கான நடவடிக்கையையும் சவுக்கு எடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக