தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

பத்திரிக்கை செய்தி

மத்திய அரசை எதிர்த்துப் போராடினாலும் சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும்
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு டி.கே. ரங்கராஜன் வேண்டுகோள்
http://epaper.theekkathir.org/epapers/1/1/2017/1/1/files/News_193581.jpg

சென்னை,டிச.31-
நிறுவனத்திற்கு எதிரான அரசின்கொள்கைகளை எதிர்த்துப் போராடும் அதேவேளையில் பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றுபிஎஸ்என்எல் ஊழியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கேட்டுக்கொண்டார்.சென்னையில் சனிக்கிழமை (டிச.31) துவங்கிய பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் (பிஎஸ்என்எல்இயு) 8வது அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவருமான அவர் பிரதிநிதிகளை வரவேற்றுப்பேசியது வருமாறு: அகில இந்திய மாநாடு நடைபெறும் சென்னை மாநகரம் உழைக்கும் வர்க்கத்தின் வரலாற்றில் முக்கியமான நகரமாகும். இந்த நகரில் இருந்த பின்னி ஆலையில் சென்னை தொழிலாளர் சங்கம் (எம்எல்யு) தொடங்கப்பட்டது.
இதே நகரில் தான்1923ல் இந்தியாவிலேயே முதல்முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது. அத்தகைய பெருமை வாய்ந்த நகரில் தான் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநாடு நடைபெறுகிறது.நாட்டு மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது. நாட்டில் எப்போதெல்லாம் இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பிஎஸ்என்எல் ஆற்றியபங்கு பாராட்டத்தக்கது. சென்னையில் கடந்தாண்டு டிசம்பர்மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவைகளை நிறுத்திக்கொண்டு ஓட்டம்பிடித்தன.
ஆனால் நெருக்கடியான நேரத்திலும்பிஎஸ்என்எல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்காக அளப்பரிய சேவையை செய்தது. விசாகப்பட்டினம் நகரை புயல் தாக்கியபோதும் காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டபோதிலும் பிஎஸ்என்எல் சிறப்பாக செயல்பட்டது.எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தொடர்ந்து பொதுத்துறையாகவே பாதுகாப்பது அவசியமாகும். ஆனால் மத்திய அரசு மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு சமமாகப் போட்டிபோடுவதற்கான வாய்ப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்க மறுத்து வருகிறது.
இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் மொபைல் போன் சேவையைத் தொடங்க அரசு 1995 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 2002ல் தான் அனுமதி வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மட்டுமல்ல 1999 ஆம் ஆண்டு இருந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியது. அந்நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக்கட்டணத்தை பாஜக அரசு தள்ளுபடி செய்தது.பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையை விரிவாக்கவும் இணையதள சேவையைத் தரமாக வழங்கவும் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடுத்தடுத்துவந்த அரசுகள் முட்டுக்கட்டை போட்டன.
நிறுவனத்திற்குத் தேவையான சாதனங்களை கொள்முதல் செய்யக்கோரி தொடர்ந்து தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டுப் போராடி வருகின்றன. பங்கு விலக்கல்,தன்விருப்ப ஓய்வு திட்டம் உள்பட பல்வேறு பிரச்சனைகளில் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு தீவிரமான போராட்டங்களை நடத்தியுள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைப்பதில் பிஎஸ்என்எல்இயு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றிவருகிறது.அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் அதே வேளையில் பொதுமக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதிலும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.
பொதுமக்களுடனான உறவை மேம்படுத்தும்வகையிலும் சேவையில் முன்னேற்றம் காணும் வகையிலும் நிர்வாகமும் தொழிற்சங்கமும் இணைந்து மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகள் பாராட்டத்தக்கவை.நிறுவனத்தின் சந்தையிடல் செயல்பாடுகளில் ஊழியர்களும் இணைந்ததால் பிஎஸ்என்எல் சாதனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.எனவே இந்தப் பின்னணியில் சென்னையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பலப்படுத்தவும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளில் வெற்றி காணவும் வருங்காலத்திற்கான பாதையை திட்டமிடவும் விவாதிக்கப்படும் என்று நம்புகிறேன்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக