சமூக நலத்துறையால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டங்கள் அரசியலாக்கப்பட்டதன் விளைவாக சீரழிந்துள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள், விதவையர், முதியோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் 8 வகையான ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2010 வரை இந்த திட்டங்களின் கீழ் மாதம் ஒன்றுக்கு ரூ.400 மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டே இருந்த நிலையில் அன்றைய திமுக அரசு ரூ.500 ஆக உயர்த்தியது. சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் இந்த ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தி வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. அதன் படியே ஆட்சிக்கு வந்த உடன் வெளியிட்ட அரசாணை எண்: 41 ன் படி ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த அரசாணையின் படி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர். ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், இணை இயக்குனர் சுகாதாரத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் 7 நபர்கள் மற்றும் உறுப்பினர் செயலராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இருப்பார் என்று அரசாணை தெரிவிக்கிறது.
ஆனால் இந்த அரசாணையின் வரம்புக்குள் வராத வருவாய் துறையிடம் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இவர்களில் கடும் ஊனமுற்றோர்- 314, மூளை வளர்ச்சி இல்லாதோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர்-1126, தசை சிதைவு-106, தொழு நோயிலிருந்து மீண்டோர்-240 பேர் என மொத்தம் 1786 நபர்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவித்தொகை பெற்று வருகின்றனர். மாறாக வருவாய்த் துறையினரிடம் 80 விழுக்காடுக்கும் அதிகமான பயனாளிகள் தள்ளி விடப்பட்டனர்.
முதியோர் ஓய்வூதியத்திற்கும் (ஓஏபி)- மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திற்கும் (பிஎச்பி) மாறுபாடு இல்லாமல் ஒரே விதியை பின் பற்றி பெரும் சிரமத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு அளித்து வருகிறார்கள் வருவாய் துறையினர். ஊத்தங்கரை வட்டம் கொம்மம்பட்டு கிராமத்தில் கணவருடன் வசிக்கும் பார்வையற்ற பழனியம்மா, அஞ்செட்டி அருகே உயரக் குறைபாடுள்ள சாவித்திரி உள்ளிட்ட பலருக்கு விதவை அல்லது முதியோர் ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற ஏராளமான குளறுபடிகள் வருவாய் துறையினரால் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் என்.சியாமளா கூறுகையில் 30 வயது முதல் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உள்ளனர்.
வசதி படைத்தவர்களாக வும் அவர்கள் உள்ளனர். முறைகேடாக பல்லாயிரக்கணக்கானோர் இது போல் பயனாளிகளாக மாறியதில் ஆளும் கட்சியினருக்கும் வருவாய் துறையினருக்கும் சம பங்கு உள்ளது. மாற்றுத்திறனாளிகளையாவது இவர்களிடமிருந்து விடுவித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டமும் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்புக்கான புதிய சட்டம் குறித்த ஐ.நா பிரகடனம் வலுவாக எடுத்துரைக்கிறது. அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு அரசுகளுக்கும் அமைப்புகளுக்கும் உள்ளதாக அந்த பிரகடனம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமூகமும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெறுவதே உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை பயனுள்ளதாக்கும்.-சி.முருகேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக